மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்திலே பங்குனித்திங்கள் உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்று வருகின்றது. ‘
பால்குண மாதம்’ என்று கூறப்படும் பங்குனி மாதத்தில் சாக்தவழிபாட்டின் சிறப்பையும் முறைகளையும் எடுத்து கூறும் சாக்த தந்திரங்கள் கண்ணகா பரமேஸ்வரிக்குரிய தியான சுலோகங்களையும், பூஜை முறைகளையும். பிரதிஸ்டை முறைகளையும் மிக சிறப்பாக எடுத்து கூறுகின்றன. மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாளுக்குரிய மிக சிறப்பானபங்குனித் திங்கள் பொங்கல் நிகழ்வுகளும் பூசைக் கிரமங்களும்இவற்றுடன் தொடர்பு படுவதை உற்று நோக்கியறியலாம்.
மட்டுவிலில் கோவில் கொண்ட அம்மனை வேண்டித் தீவின் பல பாகத்திலுமிருந்து மக்கள் தமது நேர்த்திக் கடன்களை செய்வதற்காகவும் தரிசிப்பதற்காகவும் பங்குனித் திங்கள் உற்சவ காலத்தில் ஒன்று கூடுவர். அம்பாளின் ஆலயத்திலே உள்ள பழமை வாய்ந்த தீர்த்த கேணியிலே நீராடி புனித நீரினை எடுத்து பொங்கல் செய்து ஆலய முன்றலிலே அம்பாளை நினைத்து தாமே நிவேதித்து வணங்கும் சிறப்பு காணப்படுகிறது.
அடியவர்கள் பல பகுதிகளிலுமிருந்தும் காவடி எடுத்து அம்பாளின் சந்நிதியில் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்.மூர்த்திப் பெருமையும் ,பொங்கல் தலமாகவும் , தீர்த்த விசேடமும் ஒருங்கே அமையப் பெற்ற மட்டுவில் பதி உறைகின்ற கண்ணகைஅம்பாளைஅடியவர்கள் மனம், வாக்கு , காயம், எனும் மூன்றினாலும் தொழுதுஅனுக்கிரகங்களை பெற வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.